Monday, December 4, 2006

The "DAVINCI CODE"... ஒரு சவால்!

உலக வரலாற்றில் ஐரோப்பிய வரலாறானது பிரதான இடத்தை வகிக்கின்றது. ஐரோப்பிய வரலாற்றை அறியாதவன் அரை மனிதன் என்று கருதப்பட்ட காலமும் உண்டு. "Faith in Europe, Europe in Faith" விசுவாசம் என்றால் ஐரோப்பா, ஐரோப்பா என்றால் விசுவாசம் என்ற காலம் போய், ஐரோப்பிய மக்கள் பல புதுக்கொள்கைகள், கோலங்கள் என 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் மாறத்தொடங்கினார்கள். பிரான்சிய புரட்சி, அமெரிக்க சுதந்திரப் போர், தொழிற் புரட்சி, ரஷ்யப் புரட்சி என்பவை மாற்றத்தின் அடையாளங்களாக வெளிப்பட்டன. அரசியல் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களுடன் சமயக் கொள்கைகளிலும் மாற்றங்கள் தென்படத்தொடங்கின. கிறிஸ்தவ நாகரிகத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகள், 20ஆம் நூற்றாண்டில் புதுக்கிறிஸ்தவ கொள்கைகளில் ஆர்வம் காண்பிக்க முற்பட்டன.

இத்தகையதான பல கொள்கைகளை அடியொற்றி எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள் கிறிஸ்தவர் களிடையே மனக்குழப்பத்தையும், சிலரிடையே மாற்றத்தையும் ஏற்படுத்த முனைந்தன. இந்நிலையில் தான் 2003ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் டாண் பிறவுண் (Dan Brawn) எழுதிய "த டாவின்சி கோட்" என்ற நாவல் இக்கொள்கைகளை உள்ளடக்கியதாக ஜனரஞ்சகமானதாய், பரபரப்புடன் வெளியிடப்பட்டது. ஆசிரியர் ஓர் ஆங்கில ஆசிரியர். இந்நாவல் 40 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நாவலின் பிரதிகள் 50 மில்லியன்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சல்மான் ருஷ்டியினால் எழுதப்பட்ட "Satanic Verses" எனப்பட்ட நூலின் பின் உலகில் மிகவும் சர்ச்சைக்குரியதான நூல் இது எனலாம். இந்த நாவல் பிரசுரமான வேளையிலும் பார்க்க கொலம்பியா பிக்சர்ஸ் பதிப்புரிமையை பெற்று திரைப்படமாக, 19.05.2006 இல் காண்பிக்கப்பட்டபோதுதான் மிகப்பிரபல்யமடைந்தது. பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சாதக, பாதகமான கட்டுரைகள் தினப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. இன்றும் வந்தவண்ணமிருக்கின்றது. டாண் பிறவுணின் நாவல் இத்தாலியில் தீயிடப்பட்டது. இத்தாலி, பிலிப்பைன்ஸ் போன்ற கத்தோலிக்க நாடுகள் முதலாக இத்திரைப்படம் தடை செய்யப்படவில்லை. இலங்கையிலும், இந்தியாவில் தமிழ் நாடு உட்பட சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டமை அரசியலோ என்றுகூட ஐயுறவேண்டியுள்ளது.

இந்நாவலில் காணப்படும் முக்கிய அம்சங்கள் எவை என அவதானித்தால், டாண் பிறவுண், இயேசுவை ஒரு சாதாரண மனிதனாகவும், மேரிமக்டலின் அவருடைய மனைவியாக இருந்தாள். அவளுக்கு குழந்தைகள் இருந்தன, இயேசுவின் சீடர்களில் மக்டலினும் ஒருத்தி, மக்டலின் பயத்தின் காரணமாக நாட்டைவிட்டு பிரான்ஸ் நாட்டிற்கு ஓடினாள் என்றும், அவளின் வாரிசுகள் இன்னும் வாழ்கின்றன என்றும் "ஓபுஸ் டேயி" (Opus Dei) என்ற கத்தோலிக்க இரகசிய சபை ("Le Tresor Maudit" நூலில் இரகசிய சபையின் பெயர் Prieure de Sion என்ற பெயரால் அழைக்கப்பட்டது.) இந்த உண்மையை மறைக்க பல வழிகளைக் கையாண்டது என்றும் தகவல்கள் பல, ஓவியர் டாவின்சியின் கடைசி இராப்போசன ஓவியத்தில் சங்கேத குறியீடுகளில் மறைக்கப் பட்டிருந்தன என்றும் டாண்பிறவுணின் கற்பனைக்கதை பேசிக்கொண்டே போகின்றது. இதைத்தவிர நோஸ்ரிக் கொள்கையை (Gnostic) அடிப்படையாக வைத்து ஆணும் பெண்ணும் சேர்ந்த மனிதன்தான், முழு மனிதன் எனவும் இதற்கு உதாரணம் டாவின்சியினால் வரையப்பட்ட மோனலிசா ஓவியம்; இச்சித்திரத்தில் ஆண் பெண் தன்மைகள் ஒருமித்து இருப்பதாக கருதுகிறார். இயேசுவுக்கும் பூரணத்துவ மடைய ஒரு பெண் தேவைப்பட்டதாக காண்பிக்கிறார் டாண் பிறவுண். டாவின்சியின் கடைசி இராப்போசன ஓவியத்தில் இயேசுவின் வலதுபுறத்தில் அமர்ந்திருப்பது மேரிமக்டலின் என்றும் சொல்லுகிறார். ஆண் ஆதிக்கத்தை விரும்பிய கொன்ஸ்ரன்ரைன் சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிற்பாடு நற்செய்திகளை மாற்றி எழுதிவைத்தார் என்கிறார்.

டாண் பிறவுணது கற்பனை நூலில், நாவலில் சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் வரலாற்று ரீதியாகவும், ஆதாரமுள்ள உண்மையான நூல்கள் மூலமும் தவறு என்று கிறிஸ்தவ திருச்சபைகளை சார்ந்தவர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இயேசுக் கிறிஸ்து மனிதனாக வந்த இறைமகன்தான். கொன்ஸ்ரன்ரைனின் காலத்திற்கு முன்பே (கி.பி 313) அதாவது நைசி (Nicea) மாநாட்டிற்கு முன்பே இயேசு கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது வேதத் தத்துவம். இதற்கு முற்பட்ட காலத்திலேயே ஆதிக்கிறிஸ்தவர்கள் அவரை வணங்கினார்கள். இன்று அங்கீகரிக்கப்பட்ட (Canonical) நற்செய்திகளின் கையெழுத்துப் பிரதிகள் 2ஆம், 3ஆம் நூற்றாண்டுகளிலேயே கிடைக்கப்பெற்றன என்றும் அவற்றிடையே ஒற்றுமை இருந்தது எனவும் டாண் பிறவுணின் வாதம் கற்பனை, வரலாற்றுச் சான்றுகளிற்கு புறம்பானது எனவும் விளக்குகிறார்கள். மேலும் நற்செய்தி நூல்களிற்கும், பழைய ஏற்பாட்டிற்குமிடையேயுள்ள தொடர்புகள் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாகசொல்லப்பட்டவை நற்செய்திகளில் நிறைவேறியமை என்பன இதன் உண்மைக்கு ஆதாரமாகக் காட்டப்படுகின்றன.

டாண் பிறவுண் பாரம்பரிய கதைகளை பெரும்பாலும் ஆதாரங்களாகக்கொண்டு இந்த நாவலை எழுதியுள்ளார். மக்டலினைப் பொறுத்தவரையில் அவளிடத்திலிருந்த பேய்களை ஓட்டி சமாதானத்தை இயேசு அவளிற்குக் கொடுத்தமைக்காக அவள் நன்றியும், பணிவும் உள்ளவளாக இயேசுவுக்கு அன்பு காட்டினாள். இயேசுவின் வாழ்க்கையில் மாத்தாள், மரியாள் ஜெருசலேம் வாழ் பெண்கள், வெரோனிக்கா போன்ற பெண்கள் அவரை நேசித்ததை நற்செய்தியை சான்றாக வைத்து வாதிக்கப்படுகிறது. கடைசி இராப்போசனத் தில் யேசுவின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பது ஒரு பெண் அல்ல, இளவயதானவரும் இயேசுவின் அன்பிற்கு நெருங்கியவருமான யோண்தான் எனவும், கி. பி. 33 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தை 15ஆம் நூற்றாண்டில் (1495 - 97) வாழ்ந்த டாவின்சி வரைவதற்கு ஆதாரம் எது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. டாவின்சி ஒரு பொறியியலாளரே அன்றி வரலாற்றாசிரியர் அல்லர் என்று காண்பிக்கப்படுகிறது.

இவ்விதமாக டாவின்சி கோடிற்கு எதிரான வாதங்கள் செல்லுகின்றன; சில கிறிஸ்தவ அறிஞர்கள் டாண் பிறவுணது கற்பனையில் பிறந்த நாவலிற்கு இத்தனை முக்கியத்துவம் அவசியமற்றது. உண்மை வேறு கற்பனை வேறு என்கிறார்கள். ஆனால், பலர் டாண் பிறவுண் ஒரு நன்மையைப் புரிந்துள்ளார், திருச்சபை புதிய உத்வேகத்தோடு தமது விசுவாசப் பரப்புதலை செய்ய அவர் காரணமாகிவிட்டார் என்கிறார்கள். கட்டுரைகள் உண்மையை ஆதாரத்துடன் காண்பிக்க வெளிவந்துள்ளன. உதாரணமாக, டெனிஸ் பிசர் (Dennis Fisher) எழுதிய நூலைக் குறிப்பிடலாம்.

டாவின்சி கோட் என்ற, நூலை விடுத்து திரைப்படத்தை ஆராயப்புகுந்தால் இப்படத்தின் நெறியாளர் Ron Howard ஒஸ்கார் பரிசு பெற்றவர். "The Beautiful Mind" போன்ற சிறந்த படங்களைத் தயாரித்து புகழ் படைத்தவர். இதில் இரசிகர்களை அந்நியப்படுத்த விரும்பாது சில தவிர்க்கப்பட்டுள்ளன. திரைப்படத்திற்கு வசன கர்த்தாவான அகிவா கோல்ட்ஸ்மன் (Akiva Goldsman) "வரலாறு இயேசுவை ஒரு விசேஷ மனிதனாக சொல்கிறது. அவர் ஒர் குழந்தைக்கு தகப்பனாகியும் தெய்வீகத் தன்மையுடன் இருக்கமுடியாதா?" என்ற வசனமும் திரைப்படத்தின் இறுதியில் "எது எப்படியாக இருந்தபோதும் நீ விசுவசிப்பது எது என்பதுதான் முக்கியமானது" என்பதும் சில ரசிகர்களுக்கு சமாதானம் சொல்லுவதாகத் தெரிகிறது. ஏனென்றால் இது டாண் பிறவுணின் கருத்தல்ல என்பதால்தான். கிறிஸ்தவம் தனது 2000 ஆண்டுக்கால வரலாற்றில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தும் நிமிர்ந்து நிற்பதுபோல்த் தெரிகிறது. திரையுலகில் பல படங்கள் கிறிஸ்துவைப் பற்றி வெளிவந்துள்ளன. அண்மைக் காலத்தில் வெளிவந்த "The Last Temptation of Christ" என்ற ஆங்கிலப்படம் கிறிஸ்து ஒரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதாகத்தான் சித்திரிக்க முயல்கிறது. The Passion of the Christ மெல் ஜிப்சனின் தயாரிப்பில் வெளிவந்தது. இதில் வரும் காட்சிகள் இஸ்ராயேலரிற்கு எதிரானது என்ற சர்ச்சையை உண்டுபண்ணியது நாம் தெரிந்து கொண்டதே.

மேலும், "The Holy Blood and the Holy Grail" நூலாசிரியர்களால் டாண் பிறவுண் மீது லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. தம்மால் எழுதப்பட்ட நூலின் மையக்கருத்தும், டாவின்சி கோட்டின் மையக்கருத்தும் ஒன்றெனவும், தமது நூலைத் தழுவியே டாண் பிறவுண் இந்நாவலை எழுதியுள்ளார் எனவும், இந்த தழுவலுக்காக நஷ்டஈடு தரவேண்டுமெனக் கோரியே வழக்குத் தொடரப்பட்டது. அவ் வழக்கில் டாண் பிறவுண் வெற்றி கண்டார். அவ் வழக்கையொட்டி அவர் ஓர் சிறந்த விற்பனைக்கு ஏதுவான நூலை எழுத ஐந்து உத்திகளைக் கூறினார். அதில் ஒன்றை அவதானித்தால் அவர் டாவின்சி கோட் என்ற நாவலை இந்நோக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் எழுதினாரா என்று கருதத்தோன்றுகின்றது. அது உங்கள் கவனத்திற்கு;
(1) Pick a Big IDEA with a Gray area.
(2) The first step to select a theme that (You) find particularly intriguing...
(3) The ideal has no clear right and wrong

(4) No defenite good and will, and makes for great debate.”

இத்தகைய நூல்கள், திரைப்படங்கள் அரசாங்கங்களினால் தடைசெய்யப்பட வேண்டுமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஒரு சாரார் ஐ. நா. சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித அடிப்படை உரிமை சாசனத்தின்படி அரசியல் யாப்புக்களிற்கு அமைவாக எழுத்துச் சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம் ஆகியவை ஒருவனுக்கு இருக்கிறது, எனவே வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நூல்களையோ, திரைப்படங்களையோ வெளியிட உரிமை உண்டு என்கிறார்கள். புகழ்பெற்ற ஒஸ்கார் வயில்ட் (Oscar wild) என்ற ஆங்கில எழுத்தாளர் "There is no such thing as a moral or an immoral book, Books are well writer or badly written. That is all” என்றார். Voltair (வோல்டயர்) "I dinaprou of what you say, but I will defend to Death your right to say it.” எனக் கூறியுள்ளார். அடூர் கோபாலகிருஷ்ணன் என்ற பிரபல கேரள திரைப்படத்தயாரிப்பாளர் "டாவின்சி கோட்" திரைப்படத்தைப்பற்றி United News of India விற்கு பேட்டி அளிக்கும் பொழுது திரைப்படங்களை தடை செய்யும் கட்டுப்பாட்டுச் சபையில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும், தான் சமூகத்திற்கும் பார்வையாளரிற்கும் ஒரு பொறுப்புள்ள தயாரிப்பாளர் எனவும் இத்திரைப்படம் ஒரு கற்பனைப்படைப்பே, இயேசுவைப் பற்றி முன்பே பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். நாகரிகமுள்ள எந்த நாட்டிலும் கட்டுப்பாடற்ற பேச்சு, எழுத்துச் சுதந்திரம் கிடையாது. ஆங்கிலச் சட்டத்தில்...

"Every publication in said to be blasphemous which contains any contemptuous, reviling, scurrilous or ludicrous matter relaing to god, Jesus Christ or Bible or the formularies of the Church of England as by law established. it in not blasphanous to speak or publish opinions hostile to the Christian Religion or deny the existence of God, if the publication is couched in decent and temperate language." எனச் சொல்லப்பட்டுள்ளது.
1919களில் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதியான O.W.Holmes அவர்கள் "Schenck vs the U.S" என்ற வழக்கில் பேச்சுச் சுதந்திரம் பற்றி அவர் குறிப்பிட்டது மிகவும் வரவேற்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் டாவின்சியின் கடைசி இராப்போசன சித்திரத்தைப்போல ஆனால் அரை நிர்வாணமாக இளம் பெண்கள் 12 சீடர்களைப்போல ஒரு உடை தயாரிக்கும் ஸ்தாபனத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தோன்றினார்கள். பிரான்சிய கத்தோலிக்க திருச்சபை இந்த ஸ்தாபனத்திற்கெதிராக நடத்திய வழக்கில் வெற்றி கண்டது.
இக்காலத்தில் வெளிவருகின்ற கட்டுரைகள், நாவல்கள், திரைப்படங்கள் ஆகியவை சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்தினரையோ, மதத்தினரையோ கொச்சைப்படுத்துவதாகவும், வேதனைப்படுத்துவதாகவும் பல சந்தர்ப்பங்களில் அமைந்து விடுகின்றன. இவை பெரும்பாலும் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளிலேயே வெளிவருகின்றன. முரண்பாடான கருத்துக்களுடன் வெளிவரும் நாவல்கள், திரைப்படங்கள் அதிக வருமானத்தை வெளியிடுவோரிற்கு ஈட்டிக்கொடுப்பதும், அவர்கள் பிரபலங்கள் ஆகிவிடுவதும் இப்படியான வெளியீடுகள் வருவதற்கு காரணமாகவும் ஒரு வகையில் அமைந்து விடுகிறது. ஆகவே சட்டங்களை ஆக்குவதால் மட்டும் இவற்றை கட்டுப்படுத்தி விட முடியாது. இந்த யுகத்தில் அவை திருட்டு வீ.சீ.டீ யாகவோ, இன்ரநெற் மூலமாகவோ இளைஞர்களையும், பெரியோர்களையும் அடைந்துவிடக்கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் தமது புத்தியை தீட்டிக் கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும். திருவள்ளுவர் கூறியது போல், "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
-நன்றி- "கலைமுகம்"
இவ்வாக்கம் தொடர்பான உங்கள் ஒவ்வொருவரினதும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

4 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இந்தப் படம் மற்றும் நாவல் பற்றிய என்னுடைய கருத்துக்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

http://rasithathu.blogspot.com/2006/04/blog-post_114587616575184714.html

http://rasithathu.blogspot.com/2006/04/blog-post_25.html

"வானம்பாடி" கலீஸ் said...

வருகைக்கு நன்றி குமரா!
உங்களுக்கும் ஒரு பின்னூட்டம் இட்டுள்ளேன்.

பகீ said...

இதை வாச்சிட்டு அப்புறமா ஒரு பின்னூட்டம் போடிறன் என்ன்.

"வானம்பாடி" கலீஸ் said...

ஊரோடி பகீ அண்ணே! கெதியா வாசியுங்கோ... .இல்லாட்டி படலைய கிளிச்சுக்கொண்டு ஓடீருமுங்கோ!