Thursday, December 7, 2006

எதையும் வெல்லும் பேரறிவு.....!

இவ்வாக்கத்தினை நான் எழுதுகின்ற நோக்கம் இதை வாசித்ததும் உங்களால் உய்த்துணர முடியும். முடிந்தால்.....???

வீட்டுச்சூழல் சின்ன வயசிலேயே என்னை வாசகனாக்கியது. கல்கி, குமுதம், விகடன், ஈழத்துத் தமிழின்பம் எல்லாம் வாசிப்பேன். சுதந்திரனில் வரும் கவிதைப்பூங்காவில் கொய்த பூக்களை கோப்புகளில் பத்திரப்படுத்துவேன்.

இந்த வாசிப்புப் பழக்கம் இளந்தாரி வயசிலேயே என்னையொரு வீட்டுநூலகத்திற்கு சொந்தக்காரனாக்கியது. அரவிந்தர் எல்லோரும் இங்கே ஒன்றாய் குடிகொண்டார்கள். புதுமைப்பித்தன், ஜானகிராமன், ஜெயகாந்தன், பொன்னுத்துரை, சிவத்தம்பி, தழையசிங்கம் எல்லோரும் கூடியிருந்து குலவிக் கதைத்தார்கள். மாணவ நண்பர்கள் கூடிப் படிப்பதற்கென்றே ஊரில் ஒரு விடுதியை உருவாக்கியபோதில் எனது வீட்டு நூலகமும் அங்கு விடுதிகொண்டது. பதிவேட்டில் குறித்துக்கொண்டு பல்வேறு நண்பருக்கும் படிக்கக் கொடுத்தவற்றில் திரும்பி வந்தவை சிலவேதான். ஆனாலும் புத்தகங்கள் வாங்குவதை நான் நிறுத்தியதில்லை.

திரும்பவும் நிரம்பவும் புத்தகங்கள் சேர்ந்தன. இன்று தேடியும் பெறமுடியாத சேகரங்கள், எனது சிறிய முயற்சியில் பதிப்புகள் கண்ட நூல்களின் பலனூறு பிரதிகள், இராணுவம் மூட்டிய தீயில் எரிந்துபோயின...! எனினும் புத்தகங்கள் மீதான காதலை நான் விட்டபாடில்லை.

95ல் திருமலைக்கு இடப்பெயர்வு, இன்னொருபயணம் திரும்பிப்போய் ஊரில் விட்டிற்று வந்த புத்தகங்களை மீட்டுவரலாம் என்ற எனது நம்பிக்கை பொய்த்தது.... பொய்யகிப்போன எமது சமாதானம் போல!

யுத்தம் தொடங்கியது, மீளவும் நூல்களின் சேகரம் இழந்தேன். பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களை இழந்ததுவும் குழந்தைகள் கலைக்கழஞ்சிய தொகுதிகளை இழந்ததுவும்தான் என்னை பாடாய்ப் படுத்தியது. ஆனாலும் புத்தகங்கள் சேகரிப்பதை நான் விட்டதில்லை.

மீண்டும் எனது புத்தகங்களுக்கு வந்தது ஓர் விபத்து. சுனாமி வந்ததும் ஊமையாய்க் கிடந்த உவர்மலையின் ஓடைக்கடல் ஆயிரம் கொடுநாவுகள் வளைத்துவீசி கொண்டுபோனது புத்தகங்களை. எஞ்சிய புத்தகங்களில் இன்னும் அந்தச் சுனாமி நாற்றம் எதையோ எச்சரிக்கை செய்தபடி..... ஆனாலும் என்ன? இன்னமும் புத்தகங்கள் அலுமாரியில் நிறைகின்றன.

தீ தின்னும் தான்,
பெயர்வு பிடுங்கும்தான்,
கடலும் காவுகொள்ளும்தான்....
எனினும் புத்தகங்களால் நான் பெற்ற பகுத்தறிவை,
பூத்து விரிந்தபடி புதிது தேடுகின்ற காதலினை,
எந்தத் தீதான் தின்றுவிடும்?
எந்தப் பெயர்வுதான் பிடுங்கிச்செல்லும்?
எந்தக் கடல்தான் காவுகொள்ளும்?
இனியும் நான் எடுப்பேன் வராக அவதாரம், மண்ணைக்கிண்டி மறுபடியும் வேதம் புதிது கொணர்வேன் இன்னுமொரு நாகரீக எழுச்சிக்கு வித்தாக...!!!
(உங்கள் மனப்பதிவை மறுக்காமல் பின்னூட்டமாய் இட்டுச்செல்லுங்கள்)

2 comments:

கானா பிரபா said...

கலீஸ்

உங்கள் வாசிப்பு அனுபவம் சிறப்பாகப் பதியப்பட்டிருக்கின்றது

பகீ said...

கலீஸ் பச்சையா எழுதாதையுங்கோ வாசிக்கேலாம கிடக்கு. நான் சொன்னது எழுத்தை பச்சைக் கலரில போடாதையுங்கோ எண்டு. அடைப்பலகையோட சேந்து பிரச்சனையா இருக்கு