Thursday, December 7, 2006

பாரதியும்...புதுமைப்பித்தனும்...!!!

எனக்குப் பிடித்த இந்த இரண்டு கண்களின் பார்வைக்கோணைத்தையும் உங்களை நோக்கித் திருப்புகின்றேன். உங்களின் பார்வைக்கோணம் என்னுடன் நேர்கோட்டில் சங்கமிக்கையில் இவ்வாக்கத்தை நீங்களும் சுவைக்கலாம்.

சரி! இனி நோக்குவோம்.....!

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு எட்டயபுரத்திலே பிறந்தவர். 1921ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியிலே மறைந்தார். புதுமைப்பித்தன் என அழைக்கப்படும் சொ.விருத்தாசலம் 1906ஆம் ஆண்டு கடலூருக்கு அருகாமையிலுள்ள திருப்பாதிரி புலியூரில் பிறந்தார். 1948ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் காலமானார். புதுமைப்பித்தன் மகாகவி பாரதிக்கு 24 வயது இளையவர். இருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். தமது கல்லூரிப் படிப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலே தொடர்ந்தவர்கள். இன்றும் திருநெல்வேலி இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு அறையில் “எமது மிகச்சிறந்த பழைய மாணவர்களென்று மூவருடைய படங்கள் தான் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.” அவையாவன மகாகவி பாரதி, புதுமைப் பித்தன், வ.உ.சிதம்பரப்பிள்ளை. மகாகவி பாரதியும், புதுமைப்பித்தனும் ஏறத்தாள ஓரே விதமான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் தமது வாழ்வை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலே கழித்தனர். புதுமைப்பித்தன் இந்தியா சுதந்திரமடைந்து ஒரு வருடமாவதற்கு முன்னரேயே இவ்வுலக வாழ்வை நீத்தார். பாரதியார் உலக மகாகவி என்ற அந்தஸ்தை அடைந்தவர். புதுமைப்பித்தன் தமிழ் நாட்டின் “சிறுகதை மன்னன்” என்று போற்றப்படுகின்றார். இருவரும் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவித்தவர்கள். ஆங்கிலேயரின் ஆட்சியை மனதார வெறுத்தவர்கள். நோயும், வறுமையும் அவர்களை இளமையிலேயே சாகடித்து விட்டன. மகாகவி பாரதி தமது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வினை முடித்தார். புதுமைப்பித்தன் காச நோயினால் பீடிக்கப்பட்டு கண்ணீரில் மிதந்தபடியே தமது 42ஆம் வயதில் மறைந்து போனார். மகாகவி பாரதிக்கு தங்கம்மா, சகுந்தலா என்று இரண்டு பெண் குழந்தைகள். புதுமைப் பித்தனுக்கு தினசரி என்று ஒரு பெண் குழந்தை@ இருவருமே தங்களுடைய பிள்ளைகளை உயிருக்கு மேலாக நேசித்தனர். இவ்விருவரும் ஏறத்தாள ஓரே விதமான பின்னணியையும் வாழ்க்கை அனுபவத்தையும் கொண்டிருந்த பொழுதிலும் அவர்களுடைய வாழ்க்கைத் தத்துவத்தில் எவ்வளவு வேறுபாடு? ஒரு இலட்சிய வாதிக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் சுப்பிரமணிய பாரதியார். யதார்த்த வாதியின் மொத்த உருவமாகத் திகழ்பவர் புதுமைப்பித்தன். மகாகவி பாரதியின் தெளிந்த சிந்தையையும், நல்ல எதிர்பார்ப்பையும் அவருடைய பாடல்களிலே காணலாம்.
பொழுது புலர்ந்தது! யாம் செய்த தவத்தால் புன்மையிருட்கணம் போயின யாவும்”
இதனையே தம் வாழ் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தவர் மகாகவி பாரதி. எப்பொழுதும் நல்லதையே நினையுங்கள். நல்லபடியே நடக்கும். (Positive Thinking) என்ற மந்திரத்தை ஒலித்தார் நோர்மன் வின்சன்ற் பீல் என்ற அறிஞர். மகாகவி பாரதி தான் ஆவலோடு எதிர்பார்த்த புதிய பாரதத்தை காணும்முன் மறைந்துவிட்ட பொழுதும், எப்பொழுதும் எல்லா எதிர்பார்ப்புகளும் அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தன.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது! நல்ல காலம் வருகுது!
சாதிகள் சேருது, சண்டைகள் தொலையுது,
தரித்திரம் போகுது! செல்வம் வருகுது,

படிப்பு வளருது, பாவம் தொலையுது!
படிச்சவன் சூதும், பாவமும் பண்ணினால், போவான், போவான்,
ஐயோவென்று போவான்”

பாரதியின் பாடல்கள் எல்லாவற்றிலுமே நம்பிக்கை தொனிக்கின்றது. வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு என்ற கவிதையிலும், பாரதத்தின் இன்னல்களையெல்லாம் குறிப்பிட்டு விட்டு, எனினும் இங்கு இவையெல்லாம் நீங்குபவையன்றி நிலைப்பனவல்ல என்று முடிக்கின்றார். புதுமைப்பித்தன் கதைகள், மகாகவி பாரதியின் பாடல்களின் இனிமைக்கு எவ்வளவேனும் குறைந்ததல்ல. அந்த யதார்த்தம் சமுதாயத்தின் பச்சை உண்மைகளைப் பிளந்து காட்டும் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை புதுமைப் பித்தனைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் மனங்கொள்ள வேண்டியவை. “அவருடைய குத்தலான நையாண்டி எதிரிகளை இடுப்பில் குத்தி வாங்கும். விபச்சாரஞ் செய்து வயிற்றைக் கழுவுவேனே தவிரப் பிச்சையெடுத்துப் பிழைக்க மாட்டேன் என்று நினைக்கும் யுவதி, அவர் கதாநாயகி, கற்பை விற்றுப் புருஷனைக் காப்பாற்ற விரும்பும் அம்மாள்... அவரது இலட்சியப் பெண். ‘ராமனுக்கு ஒரு நீதி, தனக்கொரு நீதியா?’ என்று குமுறிக் கேட்கும் அகல்யை... அவரது சிருஷ்டி. ஆகவேதான் அவருடைய கதைகள் பலருக்கும் புகைச்சலைத் தந்தன.” “சோகம் மலிந்த வாழ்வில், அனுபவ வேதனையினால் கசப்புற்று, எரிக்குஞ் சிரிப்பைச் சிந்தக் கற்றுக்கொண்ட உள்ளம் புதுமைப்பித்தனுடையது. வாழ்க்கைச் சூழலில் அகப்பட்டிருந்தாலும், அதனினின்றும் சிறிது ஒதுங்கி நின்று வாழ்க்கையைப் பார்த்து, அதில் மிதக்கும் வகை, வகையான வேடிக்கை மனிதர்களின் விந்தை செயல்களைக் கண்டு அவர்களது எண்ணங்கள், பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள் முதலியவற்றை உணர்ந்து சிரிக்கக் கற்றுக்கொண்ட ஒரு மனித உள்ளத்தின் உணர்ச்சி நாதங்கள் அனைத்தையும் அறிய முடிகிறது புதுமைப் பித்தனின் எழுத்துக்களிலே.” புதுமைப்பித்தனுடைய யதார்த்த வாதத்திற்கு “மனக்குகை ஓவியங்கள்” சிறந்த உதாரணம்.

“பரவெளியிலே பேரம்பலத்திலே நின்று, தன்னையே மறந்த லயத்திலே, ஆனந்தக்கூத்திட்டுப் பிரபஞ்சத்தை நடத்துகிறான் சிவபிரான்” ஒரு கால் தூக்கி உலகுய்ய நின்றாடுகிறான்பக்கத்தில் வந்து நின்றார் நாரதர். “அம்மையப்பா! எட்ட உருளும் மண்ணுலகத்தைப் பார்த்தருள்க! அதோ கூனிக் குறுகி மண்ணில் உட்கார்ந்து ரசவாதம் செய்கிறானே! சிற்றம்பலமான அவனது உள்ளத்திலே தேவரீர் கழலொலி என்ன நாதத்தை எழுப்புகிறது, தெரியுமா? துன்பம், நம்பிக்கை, வரட்சி, முடிவற்ற சோகம்... தன்னை மறந்த வெறியில் கூத்தாடும் பித்தனுக்கா இவ்வார்த்தைகள் செவியில் விழப்போகின்றன. வீணையை மீட்டிக் கொண்டு வேறு திசையைப் பார்த்து நடந்தார் நாரதர்”

மகாகவி பாரதி நல்ல நம்பிக்கையுடன் வாழ்ந்ததோடு அமையாத பரந்த உள்ளமுடையவராயிருந்தார். எல்லா மதத்தவரையும் மனமார நேசித்தார். பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் சமவுரிமை பெற்று சிறப்புற வாழ வேண்டுமென்று பாடுபட்டார். அவரிடம் எந்தவிதமான காழ்ப்பும் இருக்கவில்லை. அவர் இயேசுவையும் பாடினார். அல்லாவையும் வாழ்த்தினார். புதுமைப்பித்தனோ இத்தகைய பரந்த மனப்பான்மை கொண்டவராக இருக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் பற்றி அவர் கவனம் எடுக்கவில்லை. கிறிஸ்தவர்களை அவர் நஞ்சென வெறுத்தார். கலப்புத் திருமணம் “ஒரு கேலிக்கூத்து” என்பது இந்த யதார்த்தவாதியின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவ்விருவருக்கும் இடையிலுள்ள வேற்றுமையைக் காண்பதற்கு “கோபாலயங்காரின் மனைவி” என்ற கதை அரிய சாதனமாகின்றது. மகாகவி பாரதியாரால் உயர்ந்த இலட்சியத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கதை புதுமைப்பித்தனின் அப்பழுக்கற்ற யதார்த்தத்தினால் முடித்து வைக்கப்படுகின்றது. புதுமைப்பித்தன் பின்வருமாறு தமது கதையைத் தொடங்குகிறார். “பாரதியார் தமது ~சந்திரிகை என்ற நாவலிலே கோபாலயங்காருக்கும் வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வர்ணித்திருக்கிறார். கதையின் போக்கு, கண்டதும் காதல், என்று கோபால ஜயங்கரின் இலட்சியத்துடன் ஏன் பிரம்மை என்றும் கூறலாம் - முடிவடைகின்றது முடிவு பெறாத 2ஆம் பாகத்தில் வர்ணிப்பாரோ என்னவோ மனிதன் காதல்ப் பெண்ணின் கடைக்கண் பாணியிலே அனலை விழுங்கலாம். புளித்த குழம்பையும், குலைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை. புதுமைப் பித்தன் பின்னர் அவர்களுடைய இல்லறத்தில் வரும் சிக்கல்களை சிறிது சிறிதாக எடுத்து விளக்குகின்றார். இடைக்குலத்து சிறுமியாகிய மீனாவுக்கு உயர் அதிகாரியான கோபாலயங்காருக்கு கிட்டப் போகவே பயமாக இருக்கின்றது. இதனால் கோபாலயங்காரர் அவளுக்கு மதுப்பழக்கத்தை ஆரம்பித்து வைக்கின்றார். மீனா மாமிச உணவில்லாமல் வேதனைப் படுகின்றாள். பின்னர் ஒரு உதவியாளனினால் அவளுக்கு மாமிச உணவு கிடைக்கின்றது. மதுபோதையில் மயங்கும் கோபாலயங்காருக்கு மீனா மாமிச உணவைப் பழக்கிவிடுகின்றார். மீனா பிராமணப் பெண்ணாய் மாறுவதுபோல் கோபாலயங்கார் கோனாராக மாறிவிடுகின்றார். கோபாலயங்கார், மீனா இலட்சிய திருமணம் என்ன மாதிரி முடிகின்றது என்று காட்டுகிறார் புதுமைப் பித்தன். “கோபாலயங்காரர் மாமிச பட்சணியான பிறகு சுப்புவையரின் ஏதேச்ச அதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரக இலட்சுமியானாள். 2வருட காலம் அவர்களுக்குச் சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக் கருவியாக கோபாலயங்களின் மேல் நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன. தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரிரீயானாள் கோபாலயங்காரர் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார். இதை மறப்பதற்குக் குடி ஆபிஸிற்குப் போகுமுன் தைரியம் கொடுக்கக் குடி, வந்ததும் மீனாளின் சௌந்தரியத்தை மறக்கக் குடி. இப்பொழுது அவர்கள் தென்னாற்காடு ஜில்லாவில் இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே. இரவு பத்து மணிக்கு அக்கம் பக்கம் யாராவது போனால் கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம். “ஏ! பாப்பான்” என்று மீனாள் கொஞ்சுவாள், “என்னடி எடச்சிறுக்கி!” என்று கோபாலயங்கார் காதலுரை பகருவார். இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள். மீனாள் ‘டிரியோ டிரியோ’ பாட்டில் கோபாலயங்காருக்கு – அந்த ஸ்தாயிகளில் - பிரியமதிகம். இவ்வாறு ஓரே காலத்தில் வாழ்ந்த இரு மேதைகள் வாழ்க்கையை எவ்வாறு பார்த்தனர் என்பதனை அவர்களுடைய படைப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனாலேதான் புதுமைப் பித்தனின் யதார்த்த வாதம், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டுமே விருந்தாக இருக்கின்றது. மகாகவி பாரதியாரின் படைப்புக்களோ அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் வடிக்கும் அனைவருக்கும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் வழங்குகின்ற கருவூலமாகத் திகழ்கின்றன. வாழ் நாள் எல்லாம் வறுமையையும், தோல்வியையும், ஏமாற்றத்தையுமே கண்ட பாரதியார்.

“தமிழா கடவுளை நம்பு, உனக்கு நல்ல காலம் வருகிறது” என்று எழுதி வைத்து விட்டுப் போய்விட்டார்.

6 comments:

Johan-Paris said...

கலீஸ்!
நல்ல தொரு ஒப்பு நோக்கல்!!!புதுமைப் பித்தனை முழுதுமாகப் படிக்கக் கிடைக்கவில்லை.
தேடிப் படிக்கிறேன்.
நன்றி
யோகன் பாரிஸ்

கலீஸ் said...

வருகைக்கு நன்றி யோகாண்ணா!
என் ஆக்கத்தை தமிழ் மணம் பதிவில் கண்டீர்களா?

வசந்தன்(Vasanthan) said...

பதிவுக்கு நன்றி.
தமிழ்மணத்தில் பதிவுத்திரட்டியிலும் பின்னூட்டத் திரட்டியிலும் உங்கள் பதிவு வருகிறது.

கானா பிரபா said...

நல்லதொரு ஒப்பியல் பதிவுக்கு நன்றிகள்

கலீஸ் said...

வசந்தன், கானா பிரபா!
வருகைக்கு நன்றி......
தொடர்ந்தும் உங்கள் பின்னூட்டம் வரவேற்கப்படும்.

பகீ said...

பூங்காவில வந்திருக்கு கவனிச்சியளோ...

ஊரோடி பகீ