Wednesday, November 22, 2006

மாத்திரைக் கதை...!!


இலட்சியவாதி

ஒரு கல் பூந்தோட்டத்தில் ஏனோ தானோ என்று உலகத்தைப்பற்றி ஒரு கவலையும் இல்லாமல் சும்மா கிடந்தது.
இன்னொரு கல், படிக்கல்லாகி மனிதரை வீட்டுக்குள்ளே இட்டுச்செல்வது என்று இலட்சிய வாழ்வில் ஈடுபட்டது.
என்ன அநியாயம்! பூந்தோட்டத்தின் ஒதுக்குப்புறக் கல்லுக்கு ஒரு தொல்லையும் இருக்வில்லை, இலட்சிய வாழ்வில் ஈடுபட்ட படிக்கல்லையோ அன்றாடம் ஏறுவோரும் இறங்குவோரும் உதைத்துக்கொண்டே இருந்தார்கள்.
பூந்தோட்டத்தினதும் படிக்கல்லினதும் சரித்திரம் தெரிந்த வீட்டுப் பூனை படிக்கல்லுக்காக மிகவும் இரங்கியது. பூனை சொன்னது......
இலட்சியவாதிகளுக்குத்தான் எந்த நாளும் உதை!

குனிவு

குலையைத் தொங்கவிட்டுத் தலை குனிந்து நின்ற வாழை மரத்தைக் காட்டி -குனிந்துநிற்கும் அந்த வாழைமரம் ஒரு கோழைதானே? என்று அணில் நத்தையிடம் கேட்டது.
அணிலின் சிறுபிள்ளைத் தனத்தைப் புரிந்துகொண்ட நத்தை, அணிலுக்கு வாழையின் பெருமையை எடுத்துச்சொல்லியது.
உலகத்துக்குப் பழக்குலையை வழங்கிவிட்ட பெருமையில் அல்லவா வாழை தலைகுனிந்து நிற்கிறது, சாதிப்பவர்களின் அடக்கமே வாழையின் தலைகுனிவு என்றது நத்தை.
நத்தையின் கூற்றை ஏற்று உணர்வுபெற்ற நிலையில் அணில் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டது, "வாழை வேறு கோழை வேறு"

பரிசில்

அன்று பாலனின் பிறந்த நாள், ஏழையாகையால் அவன் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை.
அன்று மாலை அவனது பணக்கார நண்பன் சுகுமார் வந்து அவன் கையில் ஒரு பார்சலைக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துவிட்டுப் போனான்.
பாலன் பார்சலைப் பிரித்துப் பார்த்தப்போது அதற்குள் விலையுயர்ந்த அழகான பரிசு ஒன்று இருந்தது. அது ஒரு வெற்று மணிப் பேர்ஸ்.

4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கலீஸ்!
தங்கள் மாத்திரைக் கதைகள் மிக நன்று!
அறியாமை நோய்க்கு அருமையான மாத்திரைகள்.
எந்த வித்யாசமான நோக்கமுமல்ல!!அறிய விருப்பம். தாங்கள் இஸ்லாமியரா??,
யோகன் பாரிஸ்

Kanags said...

வணக்கம் கலீஸ்,

கானா பிரபாவின் அறிமுகத்துடன் உங்கள் வலைப்பதிவு கண்டு மகிழ்ச்சியடைந்தேன். தாயகத்திலிருந்து பதிகிறீர்கள் போற் தெரிகிறது. மாத்திரைக் கதை ஒவ்வொன்றும் ஒரு பெருங்கதை சொல்லுகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.

தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகள் திரட்டப்படுவதாய்த் தெரியவில்லை. முதலில் மறுமொழிகளை மட்டுறுத்தல் செய்து விட்டு தமிழ்மணத்தில் சேருங்கள். வாழ்த்துக்கள்.

"வானம்பாடி" கலீஸ் said...
This comment has been removed by the author.
"வானம்பாடி" கலீஸ் said...
This comment has been removed by the author.