Thursday, November 30, 2006

என்னைப் பாதித்ததில் இதுவும் ஒன்று.....!

இந்த ஆக்கம் எழுதப்படுவதன் நோக்கம் எவ்வித பக்கச்சார்பினையோ, மதச்சார்பினையோ கொண்டமைந்ததாக அல்ல என்பதனை தெரிவிப்பதுடன், அண்மைக்காலங்களில் என்னை மிகவும் பாதித்த சம்பவங்களில் இதுவும் ஒன்னென்ற வகையில் இவ்வாக்கத்தினை எழுதுகின்றேன். இவ்வாக்கத்திற்காக எனக்கு துணைநின்ற திருமறைக்கலாமன்ற கலைமுகம் சஞ்சிகைக்கும் என் நன்றிகள்.


வரலாற்றில் பதிவாகிய முக்கிய நிகழ்வுகள்.


கடந்த 26 வருடங்களுக்கு மேலாக அனைத்துலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து, அதனை வழிநடத்தியது மட்டுமல்லாது உலக அமைதி, ஒற்றுமை, பல்சமய இணக்கப்பாடு என இன்றைய உலகம் தவறவிட்டுக்கொண்டிருக்கும் உன்னதமான விடயங்கள் பலவற்றுக்காகவும் ஓயாது குரல்கொடுத்துவந்த திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் (இரண்டாம் யோவான் பவுல்) அவர்களின் மறைவும், அதனைத் தொடர்ந்து புதிய திருத்தற்தையாக தெரிவுசெய்யப்பட்ட பதினாறாம் ஆசீர்வாதப்பர் (16ம் பெனடிக்ற்) அவர்களின் வரவும் கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமல்ல, உலக அரங்கிலேயே அண்மையில் ஏற்பட்ட மிக முக்கிய நிகழ்வுகளாகின்றன.


"கரோல் வோய்டிலா" என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்கள் 18.05.1920 இல் போலந்திலுள்ள வாடோவிச் என்னுமிடத்தில் பிறந்தார். 1946 நவம்பரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அவர், 1958 செப்ரெம்பரில் கிராக்கோ மறைமாவட்டத்தி;ன் துணை ஆயராகவும், அதனைத்தொடர்ந்து 1963ல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகவும், பின்னர் 1967 மே 29ல் கர்தினாலாகவும் பணிநிலை உயர்த்தப்பட்டார். திருத்தந்தை முதலாம் யோவான் பவுலின் மறைவிற்குப் பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது பாப்பரசரான புனித இராயப்பரைத் தெடர்ந்துவரும் 264வது பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகியதன் பின்னர் தனக்கு முன்னர் பாப்பரசராக இருந்து மறைந்த முதலாம் யோவான் பவுலின் நாமத்தை தனக்கும் சூட்டிக்கொண்டு இரண்டாம் யோவான் பவுல் எனத் தன்பெயரை மாற்றிக்கொண்டார். 1978 ஒக்ரோபர் 16ல் ரோமிலுள்ள புனித இராயப்பர் பேராலயத்தில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது திருப்பணியை ஆரம்பித்த திருத்தந்தை அவர்கள் அன்றுமுதல் தனது கண்ணியம் மிக்க வழிநடத்தலால் திருச்சபையை நேரிய வழியில் நடத்தி வந்தார். இக்காலத்தில் அவர் மேற்கொண்ட பல முன்னுதாரணமான முயற்சிகளும், செயற்பாடுகளும் மதங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, இனங்களைக் கடந்து உலக மக்கள் அனைவராலும் மதிக்கப்படும், அன்புசெய்யப்படும், தலைவராக அவரை ஆக்கியது.

இந்த மதிப்பும் நேசிப்பும் எத்தகையதாக இருந்தது என்பதற்கு 03.04.2005 சனிக்கிழமை தனது 85வது வயதில் அவர் மறைந்தபோது உலகெங்கிலும் இருந்து சிந்தப்பட்ட கண்ணீர்த் துளிகளும், 08.07.2005ல் இடம்பெற்ற அவரது இறுதி நல்லடக்க நிகழ்வின்போது குழுமிநின்ற லட்சக்கணக்கான மக்கள் சமுத்திரம் சாட்சியாக விளங்குகின்றன. உலகில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய பிரமுகர்களின் மரணச்சடங்குகளில் மிகப்பெரிய இறுதி நல்லடக்க ஆராதனை நிகழ்வாக திருத்தந்தை அவர்களின் மரணச்சடங்கு வரலாற்றில் பதிவாகியது.

திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் புதிய திருத்தந்தையாக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ரட்சிங்கர் அவர்கள் தனது 78வது வயதில் 19.04.2005 தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாப்பரசராகிய பின்னர் 16ம் ஆசீர்வாதப்பர் எனத் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டுள்ள புதிய திருத்தந்தை அவர்கள் கத்தோலிக்க திருச்சபையில் புனித இராயப்பரை தொடர்ந்து வரும் 265வது பாப்பரசர் ஆவர். புதிய பெயரைச் சூட்டிக்கொண்ட பின்னர் அது தொடர்பாக திருத்தந்தை அவர்கள் குறிப்பிடுகையில்இ முதலாவது உலகப்போரின் போது உலக அமைதிக்காக ஓயாதுஇ அயராது போராடியவர் திருத்தந்தை 15ம் ஆசீர்வாதப்பர் ஆவார். அவரது அமைதி முயற்ச்சிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே எனது புதிய பெயராக அவரது பெயரைத் தெரிவு செய்தேன் என்றார்.

1927இல் ஜேர்மனியில் பிறந்த புதிய திருத்தத்தை 1951 ஜூன் 29 இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1977 மே 28இல் மியூனிக் நகர பேராயராக நியமிக்கப்பட்டார்;. தொடர்ந்து 1977 ஜுன் 27இல் அப்போதைய தி
ருத்தந்தை 6ஆம் சின்னப்பரால் மியூனிக் நகர கர்தினாலாக நியமிக்கப்பட்டார். பின் 1998 நவம்பர் 6இல் கர்தினால் குழுவின் துணைத் தலைவராகவும் 2002 நவம்பர் 30இல் கருதினால் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். புதிய திருத்தந்தை அவர்கள் தனது பணியினை 24.04.2005இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

4 comments:

செந்தழல் ரவி said...

Welcome :)

Johan-Paris said...

கலீஸ்!
மறைந்த பாப்பாண்டவர்!!அசாதாரணமான தகுதி,ஆற்றலுடன் அப் பதவியை அலங்கரித்தவர். சர்ச்சைகளைத் தவிர்த்தவர். தன் உறவினர் எவரையுமே!!!வத்திக்கானில் தன் பதவிக்காலத்தில் கால் வைக்க அனுமதியாதவர்." 20 நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவர்"
புதியவர் உடனே!!! சர்ச்சைகளில் சிக்குகிறார். நாம் கருவாட்டில் புழு வெனக் குதிப்போம்; ஆனால் கத்தரிக்காயிலும் புழு இருக்கு".....எனவே!!! சர்ச்சைக்குரிய மனித சமுதாயத்தின் ஆதிகால விடயங்களை ஓரளவு மறக்க முற்படுவதே!!!! நல்லுறவை வளர்க்கும்.
இதுதான் என் கருத்து.
உங்கள் தளத்திற்க்குப் பதிவுப்பட்டையைப் பொருத்துங்கள். எனக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி தரவும்.
பிரசுரத்திற்கில்லாத நீங்கள் கேட்ட தகவல்கள் தரவேண்டும்.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

கலீஸ்!

வணக்கம். உங்கள் தளத்திற்கு முதன்முறையாக வந்திருக்கின்றேன்.

பாப்பரசர்களில் 2ம் அருளப்பர் என்னை மிகவும் கவர்ந்தவர். இளைய தலைமுறைமீதான இவரது நேசிப்பு எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். அதற்காகவே அவரை நேரில் பார்க்க வேண்டுமெனும் விருப்பம் கொண்டிருந்தேன். இன்னும் சொற்பகாலமாவது அவர் வாழ்ந்திருந்தால், நிச்சயம் அவரை நேரில் சந்தித்திருப்பேன். முடியவில்லை.

திருமறைக்கலாமன்றத்துடன் தொடர்பில் இருப்பவரா நீங்கள். மிகநன்று. உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.

கலீஸ் said...

செந்தழல் ரவி!
யோகன்!
மலைநாடான்! வணக்கம்!
கடந்த வருடம் ஆவணி மாதம் ஜேர்மனில் நடைபெற்ற "உலக இளையோர் தினம்" நிகழ்விற்கு சென்றுவரும் வாய்ப்பு திருமறைக் கலாமன்றத்தின் மூலமாக எனக்கு கிடைத்தது. இதில் உலகெங்கிலுமிருந்து 8லட்சத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர். அத்துடன் தற்போதய பாப்பரசர் 16ம் பெனடிக்றின் திருப்பலியையும் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அந்த அனுபவங்களை நான் பின்னர் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே!