Wednesday, November 29, 2006

பலரசம், பலரசம்!

அகராதி·

குடும்பக்கட்டுப்பாடு
பிள்ளைச் செல்வம் விரும்பாதோர் அனுஷ்டிக்கும் விரதம்

உத்தியோகஸ்தன்
காரியாலயத்தில் மாதச்சம்பளத்திற்கு தவம் கிடக்கும் யோகி

சுயநலம்
மனிதன் தன்னைப் புளுகுவதற்காக கடவுள் கொடுத்த வல்லிமை

அன்பு
தான் வாழ்வதற்காக மற்றோருக்கு மனிதன் காட்டும் பாசாங்கு

யுத்தம்
நாகரீகம் எனும் ஓவியத்தை அழிப்பதற்காக அரசியல்வாதிகளால் தயாரிக்கப்படும் ‘இறேசர்’

சிரிப்புப் பழமொழிகள்·

  • சாண் பாம்பானாலும் முழத்தடி கொண்டடி·
  • ஏர் உழுகிறவன் இழப்பமாணால் எருது மச்சான் முறை கொண்டாடும்·
  • அசைந்து தின்கிறது ஆனை, அசையாமல் தின்கிறது வீடு·
  • பொரிமாவை மெச்சினான் பொக்கை வாயன்.
  • கழுதைக்குபதேசம் காதிலே ஓதினாலும் அபயக்குரலே குரல்

சரியில்லை மெத்தச் சரியில்லை·

சொற்பொழிவாளர் பேசும் நேரத்தை நிகழ்ச்சி நிரலில் அறிவித்துவிட்டு பின்பு வரவேற்பாளரே அவருக்கு இடம் கொடாது பேசிக்கோண்டிருப்பது.

சொற்பொழிவாளர் இடையிடையே சபையோர்களே! நேரமாகிவிட்டது அதனால் இரண்டொரு வார்த்தைகள் முக்கியமாகக் கூறிவிட்டு எனது பேச்சை முடிக்கிறேன் என்று விட்டு மேலும் பேசிக்கொண்டிருப்பதுடன் சபையோரை முணுமுணுக்கவைப்பது.

காலம் கடந்து பேசும் சொற்பொழிவாளர் சபையோரின் குழந்தைகள் பசி தாகத்துடன் இருக்கச் சற்றும் லட்சியம் செய்யாது தான் மட்டும் தாகசாந்தி பண்ணிவிட்டு உபதேசம் பண்ணுவது.


இரண்டு கவிதைகள்

மனசு

1.சில நாட்களாய்

இந்தக் கோழி கேருகிறது.

அப்ப? இன்றோ நாளையோ

முட்டையிடும்.

2. வேலி தாண்டியகோழி:

தெருவில் கிடக்கிறது

பேருந்துடன்

மோதுப்பட்டு நசியுண்டு.

3. இடிந்து போகிறது மனசு

ஒரு கோழியின்உயிருக்காகவல்ல

பல முட்டைகளுக்காக.


ஊமை….

வேர்களின்

குறட்டைச் சத்தம் கேட்டும்

சிரிக்கிறது ரோஜாக்கள்.

கிளைகளை நீட்டி

மல்லாக்காய் கிடந்து

காற்றிற்குப் புரள்கிறது மரம்.

ஒவ்வொரு பூவிற்கும்

ஒவ்வொரு உண்மை பூசப்படுகிறது.

ஒரு பூவின் உண்மை

இன்னொரு பூவிற்குப் பொய்யாகவும்

இன்னொரு பூவின் பொய்

இதற்கு உண்மையாகவும்…….

இப்படியாக பூக்களிள் முரண்பாட்டுக்குள்

முறுக்கேறும் சத்தம் கேட்டு

கண்ணயர்கிறது மரம்.

விடிந்ததும் எழுந்து பார்கின்றது

பூக்களெல்லாம் கொட்டிப்போய் கிடக்கின்றது

மூச்சுப்போய்……… மீண்டும் சிரிக்கிறது

மரம் மௌனமாய்……..!

5 comments:

tamil said...

பூக்களைப் பின்னி அருமையாக கவி வடித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் தொடருங்கள்.
தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கின்றேன்.

tamil said...

பூக்களைப் பின்னி அருமையாக கவி வடித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் தொடருங்கள்.
தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கின்றேன்.

"வானம்பாடி" கலீஸ் said...

பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகி!
தொடர்ந்தும் என் ஆக்கங்களுடன் இணைந்திருக்க வாழ்த்துக்கள்!

Unknown said...

அருமை !!!!வாழ்த்துக்கள்!

"வானம்பாடி" கலீஸ் said...

வருகைக்கு நன்றி தேவ்!
தொடர்ந்தும் இணைந்திருங்கள்!