Sunday, November 26, 2006

ஆற்றுகை நாடக இதழ்!

புளொக்கர் வாசக நெஞசங்களுக்கோர் இதழ் அறிமுகம்.
" ஆற்றுகை" இது ஒரு நாட அரங்கியலுக்கான இதழ்! யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற -திருமறைக் கலாமன்றம்- எனப்படுகின்ற ஒரு தனியார் நிறுவனத்தின் பிரபல்யமான வெளியீடு. கடந்த பல வருடங்களாக இவ் இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது. கலை ஆர்வலர்களுக்கும், நாடக அரங்கியலைப் பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கும், அரங்கியலைப் பற்றி அறியவிரும்புவோருக்கும் இது ஒரு பயன்மிக்க சிறந்த இதழ்.

உங்கள் தொடர்புகளுக்காக சில தகவல்கள்
வெளியீடு :- திருமறைக்கலாமன்றம்

No.238 Main street, Jaffna, Srilanka.
TP- 0094 021,222,2393

Wednesday, November 22, 2006

மாத்திரைக் கதை...!!


இலட்சியவாதி

ஒரு கல் பூந்தோட்டத்தில் ஏனோ தானோ என்று உலகத்தைப்பற்றி ஒரு கவலையும் இல்லாமல் சும்மா கிடந்தது.
இன்னொரு கல், படிக்கல்லாகி மனிதரை வீட்டுக்குள்ளே இட்டுச்செல்வது என்று இலட்சிய வாழ்வில் ஈடுபட்டது.
என்ன அநியாயம்! பூந்தோட்டத்தின் ஒதுக்குப்புறக் கல்லுக்கு ஒரு தொல்லையும் இருக்வில்லை, இலட்சிய வாழ்வில் ஈடுபட்ட படிக்கல்லையோ அன்றாடம் ஏறுவோரும் இறங்குவோரும் உதைத்துக்கொண்டே இருந்தார்கள்.
பூந்தோட்டத்தினதும் படிக்கல்லினதும் சரித்திரம் தெரிந்த வீட்டுப் பூனை படிக்கல்லுக்காக மிகவும் இரங்கியது. பூனை சொன்னது......
இலட்சியவாதிகளுக்குத்தான் எந்த நாளும் உதை!

குனிவு

குலையைத் தொங்கவிட்டுத் தலை குனிந்து நின்ற வாழை மரத்தைக் காட்டி -குனிந்துநிற்கும் அந்த வாழைமரம் ஒரு கோழைதானே? என்று அணில் நத்தையிடம் கேட்டது.
அணிலின் சிறுபிள்ளைத் தனத்தைப் புரிந்துகொண்ட நத்தை, அணிலுக்கு வாழையின் பெருமையை எடுத்துச்சொல்லியது.
உலகத்துக்குப் பழக்குலையை வழங்கிவிட்ட பெருமையில் அல்லவா வாழை தலைகுனிந்து நிற்கிறது, சாதிப்பவர்களின் அடக்கமே வாழையின் தலைகுனிவு என்றது நத்தை.
நத்தையின் கூற்றை ஏற்று உணர்வுபெற்ற நிலையில் அணில் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டது, "வாழை வேறு கோழை வேறு"

பரிசில்

அன்று பாலனின் பிறந்த நாள், ஏழையாகையால் அவன் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை.
அன்று மாலை அவனது பணக்கார நண்பன் சுகுமார் வந்து அவன் கையில் ஒரு பார்சலைக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துவிட்டுப் போனான்.
பாலன் பார்சலைப் பிரித்துப் பார்த்தப்போது அதற்குள் விலையுயர்ந்த அழகான பரிசு ஒன்று இருந்தது. அது ஒரு வெற்று மணிப் பேர்ஸ்.

வீடியோச் சிரிப்பு!



நான் திண்டத உங்களுக்கும் பிச்சுத்தாறன் நீங்களும் திண்டுபாருங்கோ. மறக்காமல் மிச்சமாய் ஒரு ஏவறையாவது ஒப்பீனியனா எனக்காக விட்டிற்றுப் போங்கோ.



வீடியோவின் பெருமையினை விரிவாக நான்பாட விநாயகனே நீயென்றும் காப்பு!

வீடியோ என்றொன்று வந்திங்கு அதுகாட்டும் விளையாட்டுக் களவில்லைக் காண்!

வீடியோ இல்லாத விழாவெல்லாம் விழாவில்லை!
விழாவிற்கு வீடியோவே தலை!

கலியாண மண்டபத்தில் வீடியோ ஆடுகின்ற
சதிராட்டத்துக் களவில்லைக் காண்!

சுபமுகூர்த்த வேளைசற்றுக் கடந்தாலும் காத்திருப்பார்
வீடியோ வரும்வரையில் தான்!

வீடியோ வரும்வரையில் குருக்களும் காத்திருப்பார்
வீடியோ பெருமைக்கோர் சான்று!

வீடியோ சொல்லும்வரை தாலியினைத் தொடமாட்டார்
வீடியோ ஆட்சிக்கோர் சாட்சி!

கன்னியவள் முகம்பார்த்துத் தாலியினைச் சூட்டாது
வீடியோ முகம்பார்ப்பான் காளை!

வீடியோ பிடிப்போர்கள் அணிவகுத்து நிற்பதனால்
விழா நிகழ்வு காண்தல் அரிது!

பூப்படைந்த கன்னிக்கு நீராட்டும் விழாவிலது
புரிகின்ற விந்தைகளோ நூறு!

கிணற்றடியில் உருவாக்கும் நீர்வீழ்ச்சியிலே கன்னி
குளிப்பதுமோர் வீடியோக் காட்சி!

கன்னியுடை மாற்றுகின்ற அறையுள்ளே நுழைந்திடவும்
பின்நில்லார் வீடியோ காண்!

சேலையினைச் சீர்செய்வார் கன்னியின் முகம்பிடிப்பார்
சேட்டைகளைப் பார்த்திருப்பர் பெற்றோர்!

மிக்சிங் செய்வதென்று கன்னிக்கு வீடியோ தரும்வதைகள்
ஒன்றல்ல நூறுவரும்!

கன்னியிடம் உண்டாகும் கூச்சத்தில் அரைப்பங்கு
வீடியோ போக்கிவிடும் காண்!

சிறப்பாக வீடியோ அமையுமென்ற ஆசையிலே
சிரித்தபடி பார்த்திருப்பர் பெற்றோர்!

வீடியோ படம்பிடிக்க வரும்போ ததன்பின்னால்
விரைந்துவரும் பெரியதொரு அணி!

குடைபிடிக்கத் திரைபிடிக்க மின் விளக்கும்
பிடிக்கவென்றே குளுவொன்று பின்தொடரக் காண்!

தாமரைக் குளமமைக்கத் தொட்டியுடன் தாமரைப்பூ
வீடியோ கொண்டுவரும் காண்!

விழாவிலே நிகழ்பவற்றைப் படம் பிடிப்பதைவிட்டு
வீடியோ காட்டுமே வித்தை!

விழாவுக்கு வாராது வந்ததென்று பொய்யுரைத்தால்
வீடியோ விளம்பிடுமே உண்மை!

வீடியோ மோகமெங்கள் பண்பாட்டைச்
சிதைக்குதையோ இனியாலும் விழித்திடுவீர்!

Tuesday, November 21, 2006

அப்துல் ரகுமானின்………

“கசல்” அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். அதன் சுதந்திரமும் மென்மையும் நளினமும் நவீனத்துவமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தமிழில் கசல் என்ற பெயரில் ஓரிரு தொகுதிகள் வந்திருந்தாலும், இதுவே தமிழில் முதல் கசல் தொகுதி எனலாம்.

கசல் என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கசல் பெரும்பாலும் காதலையே பாடும். அதிலும் காதலின் சோகத்தைப் பாடும். காதலில் புன்னகைகளை விட கண்ணீர்தானே அதிகம். காதலின் சோகம் என்பது உண்மையில் சோகம் அல்ல, அது ஒரு சுகம்.
மின்மினிகளால் ஒரு கடிதம் என்ற அப்துல் ரகுமானின் இக்கவிதைத் தொகுதியிலும் சோகக் கவிதைகளையே அதிகம் காணலாம். அதில் எனக்குப் பிடித்த சில வரிகளையும் உங்களுடன் பகிர விளைகின்றேன்…!


இறைவா!
நம் சங்கமத்திற்காகத்தான்
பெண்ணிடம்
ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறேன்

நான் பிறப்பதற்கு முன்
இருந்த இடத்தை
நீ ஞாபகப்படுத்துகிறாய்

ஒவ்வொரு பூவும்
உன் காதல் கடிதம்
இந்தக் கவிதைகள்
நீ செய்த காயங்களிலிருந்து
வடியும் இரத்தம்

வா, மறதியின் இருட்டில்
ரகசியமாய் சந்திப்போம்
உன் கண்களுக்கு அஞ்சி

என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்மறைக்கிறேன்

எல்லாப் பூக்களிலும்
உன் வாசம்
என் கனவு
உன் முன் ஏந்திய
பிச்சைப் பாத்திரம்

உன் கண்களால்தான்
நான் முதன்முதலாக
என்னைப் பார்த்தேன்

எனக்குத் தெரியும்
உன்னைக் காதலிப்பதென்பது
என்னைச் சிலுவையில்
அறைந்துகொள்வதாகும்

ஞாபகங்கள்
உனக்கு ஒற்றடை
எனக்கு வீடு

என்மேல்
உன் முகவரியை எழுதினேன்
அதனால் இறந்த கடிதம்
ஆகிவிட்டேன்




Friday, November 17, 2006

வானம்பாடிபற்றி...!

வானம்பாடி இசை பாடும் மேல்நாட்டுப் பறவையாகும். இதன் குரலில் பல ஸ்வரங்கள் உள்ளன. இது பகலிலும் பாடும், இரவிலும் பாடும். ஆனால் நிசப்தமான இரவு வேளையில் மற்ற பறவைகள் தூங்கும்போது இது மட்டும் பாடுவது மிக மிக இனிமையாக இருக்கும். ஆறே ஆறு இஞ்சு நீளமுள்ள பறவையான வானம்பாடியில் பெண் பறவைகள் பாடுவதில்லை. ஒரு தடவைக்கு நான்கைந்து முட்டைகளை போடும். வானம்பாடியை பற்றி க்ரீஸ் நாட்டில் சுவையான கதையொன்றும் உண்டு.